search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பசுமைச் வழி சாலை"

    சேலம்-சென்னை 8 வழிச்சாலையை மாற்று வழியில் செயல்படுத்த அரசு சிந்திக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ள டி.டி.வி.தினகரன், போராடுபவர்களை கைது செய்வதற்கும் கண்டனம் தெரிவித்துள்ளார். #TTVDinakaran
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சேலம்-சென்னை 8 வழி பசுமைச் சாலை அமைவதால் அழியும் பல்லாயிரக்கணக்கான விளை நிலங்களைக் காக்க போராடும் விவசாயிகளை நசுக்கி, அவர்களின் நியாயத்தை புறந்தள்ளிவிட்டு, இந்த அரசு அமைக்கப்போகும் விவசாயிகளின் வேதனை வழிச்சாலையை அமைக்கும் முயற்சியை எடப்பாடி பழனிசாமியின் அரசு தொடங்கியுள்ளது.

    இத்திட்டத்தை எதிர்த்து பேசுபவர்களையும், சமூக ஆர்வலர்களையும், போராடும் விவசாயிகளையும் கைது செய்யும் போக்கிற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். கைது செய்யப்பட்டவர்களை இந்த அரசு உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். யாருக்கும் பாதிப்பில்லாத வகையில் இத்திட்டத்திற்கான மாற்று வழியை இந்த அரசு சிந்திக்க வேண்டும் என தெரிவித்துக்கொள்கிறேன்.

    இந்த திட்டம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பிரயோஜனப்படும் என்று பரவலாக மக்கள் கருதுகின்றனர். விவசாயத்தை தாரை வார்த்துக்கொண்டிருந்தால் பின்பு உணவுக்கு என்ன செய்வோம் என்பதை இந்த ஆட்சியாளர்கள் சிந்திக்கவேண்டும். விவசாயத்திற்கு உதவும் அல்லது விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தாத வளர்ச்சி மட்டுமே தமிழகத்திற்கு தேவை என்பதை எடப்பாடி பழனிசாமியின் அரசு உணர்ந்து செயல்பட வேண்டும்.

    இதனை உணராமல் ஆணவத்தோடு இந்த அரசு செயல்படுமேயானால் தமிழகத்தின் விவசாயிகளையும், விவசாயத்தையும் காப்பதை ஒரு மக்கள் இயக்கமாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் முன்னெடுக்கும் என்று நான் எச்சரிக்கிறேன். இயற்கை வளங்களை சேதப்படுத்தாமல் இந்த திட்டத்தை செயல்படுத்த அரசு மாற்று வழி முறையை சிந்திக்கவேண்டும் எனவும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #TTVDinakaran
    ×